ம.பி. பள்ளியில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து விபத்து நேரிட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சேஹோர் பகுதியில், பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி, எதிர்பாராதவிதமாகக் கழன்று, மாணவி மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவியை ரத்த வெள்ளத்தில் பார்த்த சில மாணவிகள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அஷ்டா பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் முழுக்க பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த விடியோவில், பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென மின்விசிறி கீழே விழுகிறது. ஆசிரியை அந்த இடத்துக்கு ஓடுகிறார். உடனடியாக உதவிக்கு மற்றொரு ஆசிரியரை அழைத்து அவர், மாணவியை வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் விடியோ வெளியாகியிருக்கிறது.
பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு அவர் போபாலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சக மாணவிக்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சென்றதைப் பார்த்த மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.