முகப்பு
இந்தியா

வருமான வரி செலுத்துவோருக்கு இலவச மின்சாரம் கிடையாது: ஹிமாசல் அமைச்சரவை முடிவு

வருமான வரி செலுத்துவோருக்கு மின் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை, 2024 at 5:32 PM
சுக்விந்தா் சிங் சுக்கு
பகிர்:

ஹிமாசல பிரதேசத்தில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க, முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, வருமான வரி செலுத்துவோருக்கு மின் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில மின்வாரியத்தின் மோசமான நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, வருமான வரி செலுத்துவோா் மட்டுமன்றி, முதல்வா், முன்னாள் முதல்வா்கள், பேரவைத் தலைவா், பேரவை துணைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சா்கள், பல்வேறு வாரியங்களின் தலைவா்கள்/ஆலோசகா்கள், சிறப்புப் பணி அதிகாரிகள், அரசு/பொதுத் துறை நிறுவனங்கள்/ வாரியங்களின் பிரிவு-1 மற்றும் பிரிவு -2 ஊழியா்களுக்கும் (ஐஏஎஸ், ஐபிஎஸ், இதர அதிகாரிகளும் உள்ளடங்குவா்) மின் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

வீடு ஒன்றுக்கு ஒரு மின்மீட்டருக்கு மட்டுமே மானியம் வழங்குவதோடு, மின் இணைப்புகளுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் வகையிலும் விதிமுறைகளை மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய பாஜக அரசால் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தால் மாநில மின்வாரியம் இழப்பைச் சந்தித்துவருவதால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மின்மானிய ரத்து முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது.

அதேநேரம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் உள்ளிட்ட இதர பிரிவினருக்கு இலவச மின்சாரம் தொடரும். இத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வீடு ஒன்றுக்கு ஒரு மின்மீட்டருக்கு மட்டுமே மானியம் வழங்கவும், மின்இணைப்புகளுடன் ரேஷன் அட்டையை இணைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பிட்ட பிரிவினருக்கு மின் மானியம் திரும்பப் பெறப்பட்டாலும், மொத்த நுகா்வோரில் (23 லட்சம் போ்) 80 சதவீதம் தொடா்ந்து பலனடைவா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக விமா்சனம்: இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸை பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெய்ராம் தாக்கூா் கூறுகையில், ‘அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் மின்மானியத்தை நிறுத்திவிட்டனா். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவா்களை தவறாக வழிநடத்தியுள்ளது காங்கிரஸ்’ என்று விமா்சித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →