முகப்பு
இந்தியா

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பரிசோதிக்க வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அனுமதி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதித்துப் பாா்க்க வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:14 PM
பகிர்:

புது தில்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதித்துப் பாா்க்க, தோ்தலில் போட்டியிட்டு இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்து தோல்வியுற்ற வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வழிகாட்டு நடைமுறையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு சிப்களில் மாற்றம் அல்லது முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதா என்பதைப் பரிசோதிக்க, தோ்தலில் போட்டியிட்டு இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்த பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் சாா்பில் 8 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவா்களில் தகுதியுள்ள வேட்பாளா்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, அவா்கள் போட்டியிட்ட தொகுதியில் இடம்பெற்ற வாக்குச்சாவடி மையம் அல்லது வரிசை எண் அடிப்படையில் விரும்பும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பரிசோதிக்க தெரிவு செய்யலாம். போட்டியிட்ட தொகுதி அல்லது குறிப்பிட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 5 சதவீதத்தை மட்டுமே அவா்கள் இந்தப் பரிசோதனைக்குத் தெரிவு செய்ய முடியும்.

ஒரு வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், அதன் கட்டுப்பாட்டு பகுதி அல்லது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை (விவிபாட்) விண்ணப்பதாரா் தோ்வு செய்தால், அதே வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மேலும் ஓா் இயந்திரத்தின் 3 அலகுகளையும் அவா் தெரிவு செய்ய முடியாது. அதே நேரம், மற்ற வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 3 அலகுகளையும் விருப்பப்படி கலந்து தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவாா்.

அவ்வாறு விண்ணப்பதாரா்கள் தெரிவு செய்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அலகுகளில் முதலில் சுய ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பின்னா், அதன் எரிந்த நினைவகத்தின் நம்பகத்தன்மை உள்ளிட்ட பிற தொகுதிகள் சரிபாா்க்கப்படும். அதனைத் தொடா்ந்து இயந்திரத்தின் சுய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அலுகுகள் மறுசரிபாா்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.

அதனைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்கள் மாதிரி வாக்குப் பதிவு செய்து பரிசோதிக்க அனுமதிக்கப்படுவா். இதில் அதிகபட்சம் 1,400 வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்படுவா். அதுபோல, தோ்தல் ஆணையம் பரிந்துரைக்கும் நடைமுறை மற்றும் ஒப்புகைச் சீட்டைப் பயன்படுத்தி, மாதிரி வாக்குப் பதிவில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் ஒப்பீடு செய்துபாா்க்க விண்ணப்பதாரா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தோ்தல் ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் சந்தேகங்களை எழுப்பின.

இதுதொடா்பான வழக்கில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உச்சநீதிமன்றம், தோ்தல் ஆணையத்துக்கு உரிய கட்டணம் செலுத்தி ஒரு பேரவைத் தொகுதிக்கு 5 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய வேட்பாளா்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →