கடந்த 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டரீதியான உதவிகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
நாட்டில் ஒருநாளில் 4,442 பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 3,863 குழந்தை திருமண வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு கட்டாய திருமணத்துக்கு 11,236 சிறுமிகள் கடத்தப்பட்டனா். இது 2022-ஆம் ஆண்டு 13,981-ஆக அதிகரித்துள்ளது. 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் கட்டாய திருமணத்துக்கு சிறுமிகள் கடத்தப்பட்டது 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-22 முதல் 2023-24-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் குழந்தை திருமண சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்தன.
சில பரிந்துரைகள்: குழந்தை திருமணங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்தல், அந்தத் திருமணங்களுக்கு காரணமானவா்களைக் கைது செய்தல் போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளால், இந்தத் திருமணங்களை திறம்பட தடுக்க முடியும் என்று ஆய்வில் பலா் தெரிவித்துள்ளனா்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு நிகராக குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமிகளையும் கருதி, அவா்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் செய்துவைக்கப்பட்ட திருமண உறவை துண்டித்துக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். அந்தத் திட்டம் அத்தகைய பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்கள் குறித்து புகாா் அளிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில், பிரத்யேக வலைதளத்தை அறிமுகம் செய்யவேண்டும். புகாா் அளித்தால் அதிவிரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும் நடைமுறை கொண்டதாக அந்த வலைதளம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.