விமான விபத்து ANI
சிறப்புச் செய்திகள்

சஞ்சய் காந்தி முதல்.. அஜீத் பவார் வரை.. விமான விபத்துகளில் பலியான பிரபலங்கள்!

சஞ்சய் காந்தி முதல் அஜீத் பவார் வரை பல பிரபலங்கள் விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் பலியாகியிருக்கிறார்கள்.

இணையதளச் செய்திப் பிரிவு

இன்று தைவான் என அழைக்கப்படும் பகுதியில், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தரவுகளின்படி, இவர்தான், விமான விபத்தில் பலியான முதல் இந்திய அரசியல் தலைவராவார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் பலியானார். அவர் உயிரிழந்ததை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்தது.

விமான விபத்தில், விமானிகள் இருவர், அஜீத் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்பட ஐந்து பேரும் பலியாகியிருக்கிறார்கள்.

தன்னுடைய சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க, மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார் அஜீத் பவார். அவர் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளாகி, விமானம் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அஜீத் பவார், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்வராக இருந்தபோது மரணமடைந்தவர்கள்...

பிரிக்கப்படாத ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த விமான விபத்திலும், அருணாசலப் பிரதேச முதல்வராக இருந்த தோர்ஜி காண்டு, கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த விமான விபத்திலும் பலியானவர்கள்.

முக்கிய அரசியல்வாதிகளை பலிகொண்ட விமான விபத்துகள்..

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் காந்தி, புகழ்பெற்ற அரசியல் தலைவரான மாதவராவ் சிந்தியா, மக்களவைத் தலைவர் ஜி.எம்.சி. பாலயோகி, எஸ். மோகன் குமாரமங்கலம், மத்திய இணையமைச்சர் என்விஎன் சோமு ஆகியோரும் விமான விபத்துகளில் பலியானவர்கள்.

கடந்த 1980, ஜூன் 23ஆம் தேதி, சஞ்சய் காந்தி சிறிய விமானத்தில் பயணித்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானார். அவருக்கு அப்போது வயது 34. இந்த விமான விபத்து அப்போது நாட்டையே உலுக்கியது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான மாதவராவ் சிந்தியா, கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது செஸ்னா விமான விபத்தில் பலியானார்.

மக்களவைத் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான ஜி.எம்.சி. பாலயோகி கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் 3- அன்று ஆந்திரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானி, நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன்-கேட்விக் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒருவர் தவிர, 171 பேர் விபத்தில் பலியாகினர்.

இவர்களைத் தவிர முக்கிய பிரபலங்கள் சிலரும் விமான விபத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற விபின் ராவத், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதில், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என புகழப்படும் விஞ்ஞானி டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா, 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார்.

2005ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில், தொழிலதிபரும், ஹரியாணா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால் தன்னுயிரை இழந்தார்.

1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசின் சூப்பர்-கிங் விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் பஞ்சாப் ஆளுநர் சுரேந்திர நாத் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பாஜக வேட்பாளர்களுக்காக ஆந்திர மாநிலத்தில் அரசியல் பிரசாரம் மேற்கொள்ள ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது, விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.

இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதிதாக திருமணமாகி, கர்ப்பிணியாக இருந்த சௌந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

இந்திய வரலாற்றில், விமான விபத்துகளில் அரசியல்வாதிகள் மரணமடைவது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வானிலை, தொழில்நுட்பக் கோளாறு போன்றவை இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம், மக்களிடையே சந்தேகங்கள் எழுவதும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

From Sanjay Gandhi to Ajit Pawar, many celebrities have died in plane and helicopter accidents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் விளக்கம்!

அதிரடியாக உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை!

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

இனி பாடப்போவதில்லை... அதிர்ச்சியளித்த அரிஜித் சிங்!

அஜீத் பவார் மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

SCROLL FOR NEXT