மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அம்மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பலியான நிலையில், மத்திய அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடைசி 5 நிமிடங்கள் ரேடாரில் இருந்து காணாமல் போனது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புணே மாவட்டம், பாராமதியில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை காலை மும்பை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணித்தார்.
லியர்ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் அஜீத் பவாருடன் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், உதவியாளர் ஒருவர் மற்றும் இரு விமானிகள் பயணித்தனர்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 8.10 மணியளவில் விமானம் புறப்பட்டுள்ளது. காலை 8.45 மணியளவில் விமானத்துடனான தொடர்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை இழந்தது.
அடுத்த 5 நிமிடங்களில் பாராமதி விமான நிலையம் அருகே தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அந்த கடைசி 5 நிமிடங்கள் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகே தெரியவரும்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து நடைபெற்ற பாராமதிக்கு விமான விபத்து விசாரணைப் பணியக அதிகாரிகளின் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விபத்து பகுதியில் தடயங்களைச் சேகரித்து, நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
விமான விபத்து விசாரணைப் பணியகமானது, இந்திய வான்வெளியில் இயங்கும் விமானங்களின் பாதுகாப்பு, விபத்துகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் அமைப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.