மகாராஷ்டிர துணை முதல்வர் பயணித்த சிறிய ரக விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளான நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜீத் பவார், 2 விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மும்பையில் இருந்து விமானம் புறப்பட்ட பிறகு, காலை 8.18 மணியளவில் பாராமதி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
பின்னர், 30 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது, கட்டுப்பாட்டு அறையை விமானி தொடா்பு கொண்டு பேசியுள்ளார். முதலில் விமான நிலைய ஓடுபாதை விமானியின் கண்ணுக்குத் தெரியாததால் முதல் முயற்சியைக் கைவிட்டு, விமானத்தை மீண்டும் மேலே இயக்கியுள்ளனா்.
பின்னர், காலை 8.43 மணியளவில் ஓடுபாதை தெரிவதாக விமானி கூறியதால் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் உத்தரவுக்கு விமானிகள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சில விநாடிகளில் ஓடுபாதையில் தீப்பிழம்பை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? விமானிகள் பதிலளிக்காதது ஏன்? தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா? விபத்துக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் நிலவுகிறது.
இந்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், தில்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த விமான விபத்து புலனாய்வு அமைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8.43 மணிக்குப் பிறகு என்ன நடந்தது? என்பது கருப்புப் பெட்டி உரையாடல் மூலம் கண்டுபிடிக்கப்படும். அதன்மூலம், விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.