உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோவில் திருவிழாவில் டிரம்ஸ் வாசிக்க மறுத்தததால், தலித் குடும்பங்கள் அனைவரையும் ஊர்ப்பொதுமக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்திய-சீன எல்லையில் இருக்கும் சுபய் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 14) இந்த முடிவை பொதுவில் அறிவித்துள்ளனர்.
சுபய் கிராமத்தில் சுமார் 6 பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல தலைமுறைகளாக அங்கு நடக்கும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல சமூக நிகழ்வுகளில் டிரம்ஸ் வாசித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, புஷ்கர் லால் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் உடல்நிலை சரியில்லாததால் கோவில் திருவிழாவில் டிரம்ஸ் வாசிக்க முடியாது என்று கூறியதால், அந்த ஊரின் பஞ்சாயத்து சார்பில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் மொத்தமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
பஞ்சாயத்து உத்தரவின்படி பட்டியலின குடும்பங்கள் வனம் மற்றும் நீர் வளங்களைப் பயன்படுத்தவும், கடைகளில் பொருள் வாங்குவதற்கும், பொது வாகனங்களைப் பயன்படுத்தவும், கோவில்களில் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தலித் மக்களை ஒதுக்கி வைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு, உத்தரவை மீறும் கிராம மக்கள் அதற்கான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று பேசும் காணொளி சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த ராமகிருஷ்ண காந்த்வால் மற்றும் யாஷ்வீர் சிங் ஆகியோர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட தலித் சமூகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.