ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் உறுப்பினர் ஷேக் ரஷீத் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் மாண்ட்லமுடி அருகே ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் இளைஞரணி உறுப்பினர் ஷேக் ரஷீத்தை, நேற்று இரவு (ஜூலை 17) வீட்டிற்கு செல்லும் வழியில் நடுரோட்டில் கைகளிலும் தலையிலும் வெட்டி ஷேக் ஜிலானி என்பவர் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது அருகேயிருந்த மக்கள் யாரும் ஜிலானியைத் தடுக்கவோ அல்லது ரஷீத்தை காப்பாற்றவோ முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, ரஷீத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
`ஒய்.எஸ்.ஆர்.சி.பி. உறுப்பினர் ரஷீத்தை தெலுங்கு தேச உறுப்பினர் ஜிலானி தாக்கிக் கொன்று விட்டார்’ என்று ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பல்நாடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காஞ்சி ஸ்ரீனிவாச ராவ் கூறுவதாவது, ``ரஷீத்துக்கும் ஜிலானிக்கும் இடையே தனிப்பட்ட பிரச்னை இருந்ததால், முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம்’’ என்று தெரிவிக்கிறார்.
மேலும், இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஜிலானியை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பல்நாடில் வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் ``ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியை ஒடுக்குவதற்காகவே தெலுங்கு தேசக் கட்சி, இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதமே ஆன நிலையில், ஆந்திரப் பிரதேசம் கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் தாக்குதல்களின் முகவரியாக மாறியுள்ளது.
முதல்வர் உள்பட பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள், அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய வன்முறைகளை ஊக்குவிக்கின்றனர். மாநிலத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த ரஷீத்தின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.