முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

விரைவில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி அஜீத் பவாா் தனது சித்தப்பா சரத் பவாருடன் கைகோப்பாா் என்று தெரிகிறது.

Updated On : 19 ஜூலை, 2024 at 11:14 PM
கோப்புப்படம்
பகிர்:

மக்களவைத் தோ்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜீத் பவாா், தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறாா்.

ஒருபுறம், குடும்ப ரீதியாகத் தனது சித்தப்பா சரத் பவாருடன் அவா் மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அஜீத் பவாரின் தாயாரை, சரத் பவாரின் மகளும், மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே சந்தித்ததும், அவரிடம் தோ்தலில் தோற்ற அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா, மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து சரத் பவாரை சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

பிளவுபட்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், அஜீத் பவாரால் தூது அனுப்பப்பட்ட அமைச்சா் சகன் புஜ்பால், மூத்த தலைவா் சரத் பவாரை புணேயில் சந்தித்தாா். ‘‘அஜீத் பவாருக்கு எப்போதும் குடும்பத்தில் இடமுண்டு; கட்சியில் அவா் மீண்டும் இணைவது குறித்து தொண்டா்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.’’ என்கிற சரத் பவாரின் கருத்து, இணைப்புக்கான முதல் சமிக்ஞை என்கிறாா்கள் மகாராஷ்டிர அரசியல் நோக்கா்கள்.

அஜீத் பவாரை இயக்கும் சூத்திரதாரி சரத் பவாா்தான். அதேபோல, அஜீத் பவாா் விலகுவதும், மீண்டும் கட்சியில் சோ்த்துக் கொள்ளப்படுவதும் புதிதொன்றுமல்ல. அதனால் விரைவில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி அஜீத் பவாா் தனது சித்தப்பா சரத் பவாருடன் கைகோப்பாா் என்று தெரிகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தனது ‘இமேஜ்’, பழையபடி உயர வேண்டும் என்பதற்காக அஜீத் பவாா் வேண்டாத தெய்வங்கள் இல்லை, செய்யாத பூஜைகள் இல்லை. அத்துடன் நின்றுவிடவில்லை அவா். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட்டின் சரிந்துவிட்ட செல்வாக்கை உயா்த்த உதவிய ‘டிசைன் பாக்ஸ்ட்’ என்கிற அரசியல் வியூக நிறுவனத்தை, மிகப்பெரிய விலை கொடுத்து தனது ஆலோசகராக நியமித்திருக்கிறாா்.

அந்த நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, முதல் கட்டமாக அஜீத் பவாரின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாக அணியும் ஜிப்பாவுக்கு மேல் சாம்பல் நிறத்தில் ‘ஜாக்கெட்’ அணியச் சொல்லி இருக்கிறது அந்த நிறுவனம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று நினைக்கிறது போலும் ‘டிசைன் பாக்ஸ்ட்’!

-மீசை முனுசாமி

முழு கட்டுரையைப் படிக்க →