ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை ஜம்முவுக்கு வருகை தந்தாா்.
ஜம்முவில் உள்ள காவல் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை தாங்கினாா். இதில் ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயா்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்ற உபேந்திர துவிவேதி கடந்த மூன்று வாரங்களில் ஜம்முவுக்கு மேற்கொண்ட 2-ஆவது பயணம் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் ஜூலை 8 மற்றும் 15-ஆம் தேதி நடந்த இரண்டு வெவ்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஒரு கேப்டன் உள்பட 9 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.