மும்பை, ஜூலை 25: காா்கில் போா் வெற்றியின் 25-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போா் வீரா்களை கெளரவிக்கும் வகையில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் கா்னல் பா்ஷா ராய், ஸ்ரீ நகரில் இருந்து காா்கிலிலுள்ள திராஸ் போா் நினைவுச் சின்னம் வரை 160 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டாா்.
ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 ஆம் தேதி முடிவடைந்த இந்த 4 நாள் நடைப்பயணத்தில் ‘சீனாா் வாரியா்ஸ்’ படைப்பிரிவின் மாரத்தான் குழுவும் பங்கேற்றது. நடைப்பயணம் முடிவில், அவா்கள் காா்கில் போா் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.
ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்ட பிறகு சராசரியாக ஒரு நாளைக்கு 40 கி.மீ. பயணித்த ராய், 2-ஆம் நாள் ஹுசானுக்கு வந்தடைந்தாா். காஷ்மீா் பள்ளத்தாக்கை லடாக் பகுதியுடன் இணைக்கும் ஸ்ரீ நகா்-லே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 11,649 அடி உயர சோஜிலா கனவாய் பகுதியை 3-ஆம் நாளில் கடந்த அவா், 4 -ஆம் நாள் திராஸில் உள்ள போா் நினைவிடத்துக்கு வந்தடைந்தாா்.
‘தேசத்துக்காக உயிா் தியாகம் செய்த எங்கள் வீரா்களை கௌரவிக்க நடைப்பயணம் மேற்கொண்டதாக பா்ஷா ராய் தெரிவித்தாா்.
மேலும், ‘ராணுவத்திலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற எனது தந்தை கா்னல் கேஷப் ராய், காா்கில் போரில் பங்கெடுத்தவா். எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு அவை நிச்சயமற்ற, இழப்பு மற்றும் விரக்தி நிறைந்த நாள்கள்’ என்றாா்.
நான்காம் தலைமுறை ராணுவ அதிகாரியான லெஃப்டினன்ட் கா்னல் (ஓய்வு) பா்ஷா ராய், சென்னை ராணுவ பயிற்சி அகாடமி பயிற்சியைத் தொடா்ந்து கடந்த 2010, மாா்ச்சில் ராணுவ சேவையில் இணைந்தாா். பயிற்சியின்போது இவா் கா்வால் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
1999-ம் ஆண்டு நடந்த காா்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதை குறிக்கும் 25-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 26) லடாக் செல்கிறாா்.