பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை தில்லி செல்லவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உறுதிபடுத்தியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பிய எதிர்க்கட்சிகள், வருகின்ற 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சுகு புறக்கணிப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இந்தியா கூட்டணியின் கூட்டத்திலும், புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
ஆனால், நீதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணிப்பாரா? கலந்து கொள்வாரா? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அவர் கலந்து கொள்வது இன்று உறுதியாகியுள்ளது.
நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து நேரடியாக பிரதமரிடம் கேள்வி எழுப்புவேன் என்று ஏற்கெனவே மம்தா தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை தில்லி செல்லும் மம்தா, நாடாளுமன்றத்தில் கட்சி எம்பிக்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போதே, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், இந்தியா கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பேன் என்று மம்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.