புது தில்லியில் இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறுவதில் உண்மையில்லை என்று மத்திய அரசின் உண்மை அறியும் அமைப்பானது தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் தகவலில் உண்மையில்லை, தவறான தகவல் என்றும், பிஐபி ஃபேக்ட் செக் என்ற எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஐபியின் ஃபேக்ட் செக் அமைப்பானது, மேற்கு வங்க முதல்வரின் குற்றச்சாட்டை பொய் என்று சொல்லியிருப்பதோடு, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதை என்பதற்கு கடிகாரம் மட்டுமே காண்பிக்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது நீதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசிக்கொண்டிருக்கும்போதே, மைக் அணைக்கப்பட்டதாக, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
பிஐபியின் ஃபேக்ட் செக் எக்ஸ் பக்கத்தில், நீதி ஆயோக்கின் 9வது கூட்டத்தின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூற்று தவறானது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என்பதை கடிகாரம் மூலம் காட்டப்பட்டது. அதைக் குறிக்க மணி கூட அடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறானது, ஒவ்வொரு முதல்வர்களுக்கும் பேசுவதற்கு என குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது என்றார்.
நிர்மலா சீதாராமன் கூறுகையில், நீதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றிருந்தார். அவர் பேசுவதை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் மேஜை முன்பு அதனைக் காட்டும் கடிகாரமும் இருந்தது. ஆனால், அவர் செய்தியாளர்களிடம் தனது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறுகிறார். அது முற்றிலும் தவறு என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், அகர வரிசைப்படி அவர் பிற்பகலில்தான் பேசியிருக்க வேண்டும், ஆனால், மேற்கு வங்க முதல்வரின் அதிகாரப்பூர்வ கோரிக்கைக்கு ஏற்ப, அவர் முன்கூட்டியே பேச அழைக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது. அவர் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என்பதற்காக, ஏழாவது நபராக பேச அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.