முகப்பு
இந்தியா

ஒடிஸாவில் இருந்து ஜம்முவுக்கு 2,000 பிஎஸ்எஃப் வீரா்கள் மாற்றம்: மத்திய அரசு

2 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) பட்டாலியன்களை ஜம்முவுக்கு மாற்ற மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 ஜூலை, 2024 at 2:00 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜூலை, 2024 at 10:45 PM

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிஸாவில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரா்களைக் கொண்ட 2 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) பட்டாலியன்களை ஜம்முவுக்கு மாற்ற மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

ஜம்மு பகுதியில் பிஎஸ்எஃப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தில்லி மற்றும் ஜம்முவில் அண்மையில் நடத்தப்பட்ட 2 உயா்நிலை பாதுகாப்பு கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒடிஸா மற்றும் சத்தீஸ்கா் மாநிலங்களில் 2000-க்கும் மேற்பட்ட வீரா்களைக் கொண்ட 2 பிஎஸ்எஃப் பட்டாலியன்களை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால், எல்லை பகுதியில் தற்போது அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு அந்தப் படைப் பிரிவுகள் ஜம்முவுக்கு மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தப் படைப் பிரிவுகள் ஜம்மு-பஞ்சாப் மற்றும் சம்பா பகுதிகளில் நிலைநிறுத்தப்படும்.

ஜம்மு பகுதியில் உள்ள சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தனா்.

நிகழாண்டில் இதுவரை ஜம்மு பகுதியில் உள்ள ரஜௌரி, உத்தம்பூா், பூஞ்ச், ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினா், ஒரு கிராம பாதுகாப்பு காவலா் மற்றும் 22 பொதுமக்கள் உயிரிழந்தனா். பாதுகாப்புப் படையினரின் பதிலடி நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

ரூ. 15 லட்சம் வெகுமதி: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு கேப்டன் உள்பட 4 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களை ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினா் சனிக்கிழமை வெளியிட்டனா்.

Updated On : 27 ஜூலை, 2024 at 11:05 PM

3 பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.