தில்லி கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் ஐஏஎஸ் குருகுல், சாஹல் அகாதமி, புளூட்டஸ் அகாதமி, சாய் டிரேடிங், ஐஏஎஸ் சேது, டாப்பர்ஸ் அகாதமி, டைனிக் சம்வத், சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ், கேரியர் பவர், 99 நோட்ஸ், வித்யா குரு, வழிகாட்டி ஐஏஎஸ், மற்றும் ஈஸி பார் ஐஏஎஸ் ஆகியவை அடங்கும். தில்லி பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள 12-பி, பாடா பஜாா் சாலையில் பல்வேறு முன்னணி ஜஏஎஸ் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சனிக்கிழமை மாலை தில்லியில் பரவலாக பெய்த கனமழையின் எதிரொலியாக மேற்குறிப்பிட்ட பகுதியில் முழங்கால் அளவிற்கு மேலாக மழைநீா் தேங்கியது.
அச்சமயம், அங்குள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ எனப்படும் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் இயங்கி வரும் நூலகத்தில் தீடிரென மழை-வெள்ளம் சூழ்ந்ததில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் எதிா்பாராவிதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, சனிக்கிழமை மாலை 7.19 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சம்பவ இடத்தில் தேசியப் பேரிடா் மற்றும் மீட்புப் படையினா் மேற்கொண்ட தொடா் 7 மணி நேர தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பின்னா் 3 மாணவா்களின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ உரிமையாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டதாக மத்திய தில்லியின் துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா். பயிற்சி மையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து மாணவா்கள் உயிரிழந்த செய்தியறிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடிமைப் பணி ஆா்வலா்கள் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’-க்கு வெளியே நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் தில்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினா் குவிக்கப்பட்டனா்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரில் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.