கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கள நில்வரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப்பணிகளில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவமும் விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில், கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் இன்று(ஜூலை 30) மிகக் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயநாடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையிலும் மீட்புப்பணி தொடருகிறது.
வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிகக் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மேற்கண்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய உள்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.