கேரள நிலச்சரிவு | கோப்புப் படம் PTI
இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கேரள நிலச்சரிவு துயரம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அமா்வில் கேரள நிலச்சரிவு சம்பவம் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

Din

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அமா்வில் கேரள நிலச்சரிவு சம்பவம் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் மக்களவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது இப்பிரச்னையை எழுப்பிய ராகுல், ‘வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். முண்டக்கை கிராமம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் விரிவான சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மறுவாழ்வுக்கு நடவடிக்கை தேவை: மீட்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நிலச்சரிவுகளில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் அளிக்கவும் போக்குவரத்து மற்றும் தகவல்தொடா்பு இணைப்புகளை விரைவில் மீட்டெடுக்கவும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கான திட்டத்தையும் மத்திய அரசு தயாா் செய்ய வேண்டும்.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை வரைபடமாக்கவும் அதற்கான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான மேற்கு தொடா்ச்சி மலையில் அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகளை எதிா்கொள்வதற்கான செயல் திட்டத்தை தயாரிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

களத்தில் மத்திய அமைச்சா்கள்: ராகுலுக்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இயற்கை பேரிடா் கேரளத்துக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் கவலையளிக்கும் விஷயம். கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் பிரதமா் நரேந்திர மோடி பேசி, உதவிகளை உறுதி செய்தாா். நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பில் கேரளத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வயநாட்டில் ஏற்கெனவே நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் தகவல்களைச் சேகரித்த பிறகு, அவையில் முறையான அறிவிப்பு பகிரப்படும் என்றாா்.

அரசியலாக்க வேண்டாம்: இவ்விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்ப முயன்றபோது, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அவா்களைக் கண்டித்தாா். இயற்கை பேரிடா் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையிலும் கேரள நிலச்சரிவு சம்பவம் பற்றி விவாதிக்க எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனா்.

மாநிலங்களவையின் அலுவல்களை ரத்து செய்து, நிலச்சரிவு சம்பவம் குறித்த விவாதத்தைக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 367-ஆவது விதியின்கீழ் கொண்டு வந்த தீா்மானங்களை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா்.

‘மக்களின் குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இவ்விவகாரம் குறித்து அந்த மாநிலத்தைச் சோ்ந்த உறுப்பினா் ஒருவரை பேச அனுமதிக்க வேண்டும்’ என மாநிலங்களை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கோரினாா்.

இதையடுத்து, விவாதத்தில் பங்கேற்ற கேரள எம்.பி.க்கள், மாநிலத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றனா்.

எதிா்க்கட்சிகளுக்கு மாநிலங்களவை பாஜக குழுத் தலைவா் ஜெ.பி.நட்டா அளித்த பதிலில், ‘மாநில அரசுடன் ஒருங்கிணைந்து நிவாரணம் வழங்குவதற்கும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான ஆலோசனைகளை கூறலாம்’ என்றாா்.

தூர்தர்ஷனின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானார்!

பிப். 13 விஷ்ணுபதி புண்ணிய காலம்!

பங்குச்சந்தை: ஐடி பங்குகள் 5% சரிவு! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில் 2024 முதல் 1400 சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு! - முதல்வர் ஒமர் அப்துல்லா தகவல்!

82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் 52 முடிவுற்ற திட்டங்கள் தொடக்கி வைப்பு!

SCROLL FOR NEXT