அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது
2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரம், சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றன.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அதாவது ஜூன் 2 ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி இவ்விரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப முதலே ஆளும் பாஜகவே முன்னிலை வகித்து வந்தது.
இறுதியில் பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அதேசமயம் என்பிபி 5, என்சிபி 3, இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா டுடே - மை ஆக்சிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, அருணாச்சல பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி 41-55 இடங்களையும், என்பிபி 2 முதல் 6 இடங்களையும், காங்கிரஸ் ஒன்று முதல் நான்கு இடங்களையும், மற்றவர்கள் இரண்டு முதல் ஆறு இடங்களையும் வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சி மீண்டும் அமையவுள்ளது.
2019 பேரவைத் தேர்தலில் அருணாச்சலில் பாஜக 41 இடங்களில் வென்றது. மேலும் ஐக்கிய ஜனதா தளம் 7 , தேசிய மக்கள் கட்சி 5, காங்கிரஸ் 4, சுயேச்சைகள் 2, அருணாச்சல மக்கள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.