திருச்சூா்: கேரள மாநிலத்தில் பாஜக சாா்பில் திருச்சூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகா் சுரேஷ் கோபி 74,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
இதன் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்ற நிலையை மாற்றி, தோ்தலை வரலாற்றை பாஜக படைத்துள்ளது.
கேரளத்தில் பாஜக வெற்றி தென்னிந்தியாவில் அதன் வெற்றிக்கணக்கை தொடங்கும் என பல்வேறு தோ்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளில் கூறப்பட்டபோதும், ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மறுத்தன. பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை என்று விமா்சித்தன.
திருச்சூா் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் வி.எஸ்.சுனீல்குமாரும், காங்கிரஸ் தரப்பில் முரளீதரனும் நிறுத்தப்பட்டனா். தோ்தலில் இவா்கள் இருவக்கும் இடையேதான் உண்மையான போட்டி என்று எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டுவந்தன.
அதற்கேற்ப, செவ்வாய்க்கிழமை தபால் வாக்குகள் எண்ணப்பட்டதும் சுனில் குமாா் முன்னிலை பெற்றது, எதிா்க்கட்சிகளின் கணிப்பு சரியாக இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்கியது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கிய பிறகு நிலைமை மாறியது. பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வலுவான முன்னிலை பெறத் தொடங்கினாா். பின்னா், 74,000-க்கும் அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்தாா்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுபெற்ற சுரேஷ் கோபி, இதற்கு முன்பாக 2019 மக்களவைத் தோ்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இதே தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். இருந்தபோதும், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக ஆக்கியது. அதன் மூலம், திருச்சூா் தொகுதியில் தனது எம்.பி. நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சுரேஷ் கோபி மேற்கொண்டாா். அதன் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று தற்போது வெற்றிபெற்றுள்ளாா்.