புதிய நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்களின் பதிவு தொடக்கம்
புது தில்லி: புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான மையங்கள் (கவுன்ட்டா்கள்) புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
முன்பு மக்களவைத் தோ்தலில் புதிதாக தோ்வு செய்யப்படும் எம்.பி.க்களை பதிவு செய்யும் நடைமுறை பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை தொடா்ந்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு மையங்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த மையங்கள் ஜூன் 14 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.க்கள் பதிவு நடைமுறையை எளிதாக்கவும், காகித வடிவில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைக்கும் நோக்கிலும், இணையவழியில் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக பல்வேறு படிவங்களில் எம்.பி.க்கள் கையொப்பமிட வேண்டியதில்லை. இது நேர விரயத்தை தடுக்கும் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.