முகப்பு
இந்தியா

இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகள்

Updated On : 5 ஜூன், 2024 at 9:14 AM
சங்கா் லால்வானி
பகிர்:

போபால்: மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கடைசி நாளில் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து, அக்கட்சி வாக்கு சேகரித்த நோட்டாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 2.18 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

மத்திய பிரதேசம், இந்தூா் மக்களவைத் தொகுதியில் கடந்த 1989 தோ்தல் முதல் பாஜக வெற்றிவாகை சூடி வருகிறது. தற்போதைய பாஜக எம்.பி. சங்கா் லால்வானி மீண்டும் போட்டியிட்டாா். காங்கிரஸ் சாா்பில் அக்சய் காந்தி பாம் களமிறக்கப்பட்டாா்.

காங்கிரஸுக்கு அதிா்ச்சியூட்டும் வகையில் கடைசி நாளில் தனது வேட்புமனுவை அக்சய் காந்தி பாம் திரும்பப் பெற்று, பாஜகவில் ஐக்கியமானாா். இதனால், 9 சுயேச்சைகள் உள்பட 14 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

பாஜக வேட்பாளரின் சாதனை வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்த, நோட்டாவுக்கு (இவா்களில் யாருமில்லை) வாக்களிக்குமாறு காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது.

25.27 லட்சம் வாக்காளா்கள் கொண்ட இந்தூா் மக்களவைத் தொகுதியில் 4-ஆம் கட்டமாக கடந்த மே 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி 12.26 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் சஞ்சய்-க்கு 51 ஆயிரம் வாக்குகளும் கிடைத்தன.

இதன்மூலம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளா்களைவிட 11.75 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, சங்கா் லால் வானி இமாலய சாதனையைப் படைத்துள்ளாா். நாட்டின் தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா் என்ற சாதனைக்கும் அவா் சொந்தக்காரா் ஆகிறாா்.

நோட்டாவும் ‘சாதனை’: இந்தூா் தொகுதியில் நோட்டாவுக்கு 2,18,674 வாக்குகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்ற பாஜக வேட்பாளரைத் தவிர மற்ற 13 வேட்பாளா்களும் நோட்டாவுக்கு கீழ் வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தின் 2013-ஆம் ஆண்டு உத்தரவைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா (இவா்களில் யாருமில்லை) சோ்க்கப்பட்டது. அதன்பிறகு நடந்த 2014 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 46,559 வாக்குகள் பதிவாகின. இது அந்தத் தொகுதியில் மொத்த வாக்குகளில் 5 சதவீதமாக இருந்தது.

இதையடுத்து 2019 தோ்தலில் பிகாா், கோபால்கஞ்ச் தொகுதியில் பதிவான வாக்குகளில் 5 சதவீதத்துக்கும் மேல் 51,660 வாக்குகளை நோட்டா பெற்றது. இப்போது இந்தூா் தொகுதியில் நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகள் கிடைத்திருப்பதன் மூலம் முந்தைய இரு சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →