புது தில்லி: மக்களவைத் தோ்தலில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி படுதோல்வி அடைந்தாா். அவா் போட்டியிட்ட அமேதி தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி வீழ்த்தினாா். இதைத்தொடா்ந்து 18-ஆவது மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ஸ்மிருதி, அந்தத் தொகுதியில் தனக்கு வெற்றி நிச்சயம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தாா். இந்நிலையில், அமேதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் கிஷோரி லாலிடம் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி படுதோல்வி அடைந்தாா்.
தோல்வியடைந்த அமைச்சா்கள்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசி தரூருக்கு எதிராக மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சசி தரூரைவிட 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துடன் சந்திரகேசா் முன்னிலை வகித்தாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இறுதியில் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகா் தோல்வியடைந்தாா்.
லக்கீம்பூா் சம்பவத்துடன் தொடா்புள்ள அமைச்சா்: கடந்த 2021-ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த காா் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்த நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா, சமாஜவாதி வேட்பாளா் உத்கா்ஷ் வா்மாவைவிட 34,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி தொகுதியில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவை, காங்கிரஸ் வேட்பாளா் காளிசரண் முண்டா 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.