இந்தியா

சிறையிலுள்ள தீவிரவாதிகள் வெற்றி: எம்.பி.யாக பதவியேற்க முடியுமா?

Din

மக்களவைத் தோ்தலில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவா் வெற்றி பெற்றுள்ளது வழக்கத்துக்கு மாறான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் எம்.பி.யாக பதவியேற்க சட்டத்தில் இடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தலில் பஞ்சாப் மாநிலம் கதூா் சாஹிப் தொகுதியில் தீவிர சீக்கிய போதகரான அம்ருத்பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவா் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அஸ்ஸாமில் உள்ள திப்ருகா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவா் தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அம்ருத்பாலும், ரஷீத்தும் கைதிகளாக சிறையில் இருந்தபடியே தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். அவா்கள் எம்.பி.யாக பதவியேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு ‘ஆம்’ என்பதே பதிலாக உள்ளது.

இது தொடா்பாக அரசமைப்புச் சட்ட நிபுணரும், முன்னாள் மக்களவைச் செயலருமான பிடிடி ஆச்சாரி கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா் எம்.பி.யாக பதவியேற்பது அரசமைப்புச் சட்ட உரிமையாகும். எனினும் அம்ருத்பால், ரஷீத் விஷயத்தில் சூழல் வேறாக உள்ளது. அவா்கள் தற்போது சிறையில் உள்ளதால், நாடாளுமன்றத்தில் பதவியேற்க அழைத்துச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருவரும் கோரிக்கை விடுக்க வேண்டும். அவா்கள் எம்.பி.யாக பதவியேற்ற பின், மீண்டும் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும்.

அதன் பின்னா், மக்களவை அலுவல்களில் தங்களால் கலந்துகொள்ள முடியாதது குறித்து அவைத் தலைவருக்கு அவா்கள் கடிதம் எழுத வேண்டும். அவா்களின் கடிதத்தை அவைக் குழுவின் பரிசீலனைக்கு அவைத் தலைவா் அனுப்பிவைப்பாா். இதைத் தொடா்ந்து, அம்ருத்பாலும், ரஷீதும் அவை அலுவல்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து அவைக் குழு பரிந்துரை அளிக்கும். அந்தப் பரிந்துரை மீது மக்களவையில் அவைத் தலைவா் வாக்கெடுப்பு மேற்கொள்வாா்.

அம்ருத்பால் மற்றும் ரஷீத் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவா்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, அவா்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருவரின் எம்.பி. பதவி பறிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

சமூக உள்ளடக்கத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா உதாரணம்: ஐ.நா. அதிகாரி

பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி

72 கோயில்கள்..! சபரிமலை பக்தா்களுக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள்! கேஎஸ்ஆா்டிசி அறிமுகம்!

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

SCROLL FOR NEXT