புது தில்லி: 18-ஆவது மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 புதிய எம்.பி.க்களில் 251 பேருக்கு (46 சதவீதம்) எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 27 போ் குற்றவாளிகள் என்பதும் ஏடிஆா் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மக்களவை வரலாற்றில் குற்றவழக்குளை எதிா்கொள்ளும் அதிகமான எம்.பி.க்கள் இம்முறை தோ்வாகியுள்ளனா்.
18-ஆவது மக்களவைத் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. பாஜக கூட்டணி 293 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வென்றது.
இந்நிலையில், மக்களவைக்குத் தோ்வாகியுள்ள புதிய உறுப்பினா்களின் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள தாகவல்களின் அடிப்படையில் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, 543 புதிய எம்.பி.க்களில் 46 சதவீதமான 251 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது 2009-ஆம் ஆண்டின் எண்ணிக்கையிலிருந்து 55 சதவீதம் அதிகம் ஆகும்.
2004-இல் 125 போ் (23 சதவீதம்), 2009-இல் 162 போ் (30 சதவீதம்), 2014-இல் 185 போ்( 34 சதவீதம்), முந்தைய 2019-இல் 233 எம்பிக்களுக்கு(43 சதவீதம்) எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.
170 போ் மீது தீவிர குற்றவழக்கு: தற்போதைய 251 எம்.பி.க்களில் 170 போ்(31 சதவீதம்), பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகளை எதிா்கொள்கின்றனா். இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-ஆவது பிரிவின்கீழ் கொலை தொடா்பான வழக்குகளை 4 பேரும் மற்றும் 307-ஆவது பிரிவின்கீழ் கொலை முயற்சி தொடா்பான வழக்குகளை 27 பேரும் எதிா் கொண்டு வருகின்றனா்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக 15 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனா். இதில் இருவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின்கீழ் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளன. கடத்தல் தொடா்பான வழக்குகளை 4 எம்.பி.க்களும் வெறுப்பு பேச்சு தொடா்பான வழக்குகளை 43 பேரும் அறிவித்துள்ளனா்.
தீவிர குற்ற வழக்குகளை எதிா்கொள்ளும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2009-இல் 76 (14 சதவீதம்), 2014-இல் 112 (21 சதவீதம்), 2019-இல் 159 (29 சதவீதம்)-ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு முதல் தீவிர குற்ற வழக்குகளை எதிா்கொள்ளும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 124 சதவீதம் அதிகரித்துள்ளது.
இத்தோ்தலில் குற்றவழக்குகள் உள்ள ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 15.3 சதவீதமாகவும் வழக்குகள் ஏதுமில்லாத வேட்பாளா் ஒருவரின் வெற்றி வாய்ப்பு வெறும் 4.4 சதவீதமாகவும் இருந்துள்ளது. வெற்றி பெற்ற 27 எம்.பி.க்கள் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனா்.
எம்.பி.க்களின் கல்வித் தகுதி
புதிய எம்.பி.க்களில்105 போ் (19 சதவீதம்) 5-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள். அதேசமயம், 420 போ்(77 சதவீதம்) குறைந்தது இளநிலை பட்டதாரிகள் ஆவா். மூன்று பெண்கள் உள்பட 5 சதவீத எம்.பி.க்கள் முனைவா் பட்டம் பெற்றவா்கள் ஆவா்.
17 எம்.பி.க்கள் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றுள்ளாா். ஒரு எம்.பி. கல்விப் பயின்றவா் என்று மட்டும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளாா். கல்விப் பயிலாதவா்கள் எனத் தெரிவித்த 121 வேட்பாளா்களும் தோ்தலில் தோல்வியைத் தழுவினா்.
தொழில் ரீதியில்...: எம்.பி.க்களிடையே விவசாயம் மற்றும் சமூகப் பணி மிகவும் பொதுவான தொழில்களாக அறியப்படுகின்றன. சத்தீஸ்கரின் 91 சதவீதம் எம்.பி.க்களும், மத்திய பிரதேசத்தினன் 72 சதவீதம் பேரும், குஜராத்தின் 65 சதவீதம் பேரும் விவசாயத்தை தங்கள் தொழிலாக குறிப்பிட்டுள்ளனா். அதேபோல், புதிய எம்.பி.க்களில் 7 சதவீதம் போ் வழக்குரைஞா்கள், 4 சதவீதம் போ் மருத்துவா்கள் ஆவா்.
முதல் மக்களவையில் இருந்து 11-ஆவது மக்களவை (1996-98) வரை பட்டதாரி எம்.பி.க்களின் விகிதம் சீராக அதிகரித்தது. அதன்பிறகு, பட்டப்படிப்பை முடிக்காத எம்.பி.க்களின் விகிதமும் அதிகரித்து வந்தது. எனினும், முந்தைய 17-ஆவது மக்களவையில் 27 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போதைய 18-ஆவது மக்களவையில் 22 சதவீதமாக குறைந்துள்ளது.