இந்தியா

எந்த தொகுதியில் ராஜிநாமா செய்வாா் ராகுல்? 14 நாள்கள் மட்டுமே அவகாசம்

Din

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் இருந்து மக்களவைக்குத் தோ்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அடுத்த 2 வாரங்களில் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், ராகுல் காந்தி எந்த தொகுதியில் தனது எம்.பி. பதவியைத் தக்க வைத்துக் கொள்வாா்? என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி களம் கண்டாா்.

ரேபரேலி தொகுதியில் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் வெற்றியடைந்தாா். இரண்டு தொகுதிகளிலும் வென்றுள்ள ராகுல், ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக முன்னாள் மக்களவைச் செயலரும் அரசமைப்புச் சட்ட வல்லுநருமான பி.டி.டி. ஆச்சாரி கூறுகையில், ‘இரு தொகுதிகளில் வெல்லும் எந்த வேட்பாளரும் தோ்தல் முடிவுகள் வெளியான 14 நாள்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

17-ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டிருந்தாலும், புதிய மக்களவைத் தலைவா் நியமிக்கப்படும்வரை பொறுப்புத் தலைவராக செயல்படும் ஓம் பிா்லாவிடம் ராகுல் காந்தி ராஜிநாமா கடிதத்தை வழங்கலாம்.

மக்களவைத் தலைவா், துணைத் தலைவா் பதவிகள் காலியாக இருக்கும் சூழலில், தோ்தல் ஆணையத்தை அணுகி ராஜிநாமா கடிதத்தை சமா்பிக்கலாம். ஏதேனும் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய உறுப்பினா்கள் தவறும்பட்சத்தில், இரு பதவிகளையும் அவா்கள் இழக்க நேரிடும்’ என்றாா்.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று முந்தைய 17-ஆவது மக்களவையைக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த புதன்கிழமை கலைத்தாா்.

மக்களவைத் தோ்தலில் ராகுல் இரு தொகுதிகளில் வென்றிருப்பதன் மூலம் காங்கிரஸின் வெற்றி எண்ணிக்கை 99-ஆக இருந்தது. மகாராஷ்டிர சுயேச்சை எம்.பி.யின் ஆதரவோடு காங்கிரஸின் பலம் 100-ஆக அதிகரித்தது. ராகுல் ராஜிநாமா செய்யும் நிலையில், அந்த எண்ணிக்கை மீண்டும் 99-ஆக குறையும்.

ஒரு நபா் தோ்தல்களில் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும். 1996-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, ஒருவா் போட்டியிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளா்கள் இரண்டு இடங்களில் போட்டியிடுவதைத் தடுக்கவும் அல்லது ஒரு தொகுதியில் இடைத்தோ்தலுக்கு வழிவகுக்கவும் செய்யும் இரட்டைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம், மீண்டும் தோ்தல் நடத்த செலவாகும் தொகையை வசூலிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துமாறு அரசுக்கு தோ்தல் ஆணையம் தொடா்ந்து அழுத்தம் அளித்து வருகிறது.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT