மகாரஷ்டிரத்தின் நவி மும்பையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரி எனக்கூறி மும்பை பெருநகர இரும்பு மற்றும் எஃகு சந்தை கமிட்டியில் உள்ள நபர்களிடம் ரூ.54 கோடியை பெண் ஒருவர் மோசடி செய்து ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை பகுதி போலீஸார் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கமிட்டியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் படி, ‘ஜூன் 2022-ல், ஒரு பெண் பன்வேல் பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து வருவதாகவும், தன்னை வங்கி மேலாளர் என்றும் கூறி இங்குள்ள நபர்களிடம் அறிமுகமானார்.
இங்குள்ள நபர்களின் நம்பிக்கையைப் பெற்ற அவர், கமிட்டியின் நிதியை நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், போலி ஆவணங்களைக் காட்டி அதிக வட்டி சதவீதம் வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
இதனை நம்பி உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ரூ.54.28 கோடி வரை முதலீடு செய்தனர். அந்தப் பெண் அதற்கு போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை வழங்கினார்.
பின்னர், வைப்புத்தொகையின் காலம் முடிவடைந்து அதற்கான வட்டித்தொகை மற்றும் பணத்தை கமிட்டியின் சார்பில் திரும்பக் கேட்டபோது அந்தப் பெண் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், வழங்கவேண்டிய தொகை எதையும் இன்றுவரை வழங்கவில்லை’ என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, குற்றஞ்சாட்டப்பட்டப் பெண், வங்கியின் கருவூலம் மற்றும் முதலீட்டுத் துறையின் சார்பில் பணத்தை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டு மே 24, 2024 அன்று ஒரு போலியான கடிதத்தை அனுப்பியதாக அந்த அதிகாரி கூறினார்.
இந்த வழக்கின் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 465 (மோசடி) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.