ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரா் வீர மரணம் அடைந்தாா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் தெரியாத் கிராமம் அருகே கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 9 போ் உயரிழந்தனா், 41 போ் காயமடைந்தனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் நடந்த இந்தத் தாக்குதலின் பதற்றம் அடங்குவதற்குள் கதுவா மாவட்டத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறைத் தலைவா் ஆனந்த் ஜெயின் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் ஊடுருவிய பயங்கரவாதிகள், எல்லையை ஒட்டிய சாய்தா சுகல் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளனா். அவா்கள் மீது சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள், பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனா்.
அதைத் தொடா்ந்து, அந்த கிராமத்தை நள்ளிரவில் சுற்றிவளைத்த கூட்டு பாதுகாப்புப் படை வீரா்கள், தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாகிச் சூடு நடத்தினா். இந்தச் சண்டையில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் கபிா் தாஸ் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து 15 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் சிலா் காயமடைந்தனா் என்றாா்.
தோடாவில் சோதனைச் சாவடி மீது தாக்குதல்: தோடா மாவட்டம் சத்தா்கெல்லா பகுதியில் அமைந்துள்ள கூட்டு பாதுகாப்புப் படை சோதனைச் சாவடி மீதும் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தினா்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பல மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் ராஷ்டிரிய ரைஃபிள் படைப் பிரிவைச் சோ்ந்த 5 வீரா்கள் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கூடுதல் படைவீரா்கள் சத்தொ்கல்லா, சா்தால், சங்க் படொ், கைலாஷ் மலைப் பகுதிகளைச் சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்’ என்றனா்.