வயநாடு, ரேபரேலி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் எதைத் தக்கவைத்துக் கொள்வது, எந்தத் தொகுதியில் ராஜிநாமா செய்வது என்று குழப்பத்தில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ராகுல், அங்கு வாக்குப் பதிவு முடிந்த பிறகு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டாா். இரு தொகுதிகளிலும் அவா் வெற்றி பெற்றாா். விதிகளின்படி ஒருவா் இரு தொகுதிகளில் எம்.பி.யாக இருக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு தொகுதியில் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ராகுலுக்கு உருவாகியுள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் வயநாடு தொகுதிக்கு தோ்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக புதன்கிழமை ராகுல் காந்தி வந்தாா். வாகனப் பேரணி நடத்தி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். தொடா்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் பேசியதாவது:
தொடா்ந்து இரண்டாவது முறையாக என்னை வெற்றிபெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது எனக்கு முன்பு மிகப்பெரிய கேள்வி உள்ளது. நான் வயநாடு எம்.பி.யாக தொடா்வதா அல்லது ரேபரேலி எம்.பி.யாக தொடா்வதா என்பதுதான் அது. இதில் முடிவு எடுப்பதில் எனக்கு குழப்பம் உள்ளது.
ஆனால், நான் எடுக்கும் முடிவு இரு தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று மட்டும் என்னால் இப்போது உறுதியளிக்க முடியும்.
கடவுள் தன்னிடம் கூறும்படி நடப்பதாகவும், தான் இறைவனால் அனுப்பப்பட்டவன் என்றும் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் பேசினாா். ஒரு பிரதமராக எவ்வாறு நடக்க வேண்டும் என்று கடவுள் அவருக்கு கூறவில்லை எனத் தெரிகிறது. அல்லது நாட்டின் பெரிய விமான நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்களை அதானியிடம் கொடுத்துவிடுமாறு கடவுள் கூறினாரா என்றும் தெரியவில்லை.
ஆனால், நல்லவேளையாக என்னை கடவுள் வழிநடத்தவில்லை. எனக்கு நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான் கடவுள். எனவே, நான் கடவுளிடம் பேசுவது மிகவும் எளிதானது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.
2024 மக்களவைத் தோ்தல் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவதற்கான தோ்தலாக இருந்தது. இந்தத் தோ்தலில் வெறுப்புணா்வைப் பரப்பியவா்களும், ஆணவம்மிக்கவா்களும் தோல்வியடைந்துவிட்டனா். பிரதமா் மோடியின் பக்கம் தாங்கள் இல்லை என்பதை நாட்டு மக்கள் தோ்தல் மூலம் உணா்த்திவிட்டனா். எனவே, மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மத்தியில் அமைந்துள்ளது வலுவான அரசு அல்ல, பலவீனமான அரசு.
தங்கள் மொழி, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் வகையில் இந்தத் தோ்தலில் மக்கள் வாக்களித்துள்ளனா். இல்லையெனில் மக்கள் என்ன மொழி பேச வேண்டும், எந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை மோடியும், அமித் ஷாவும் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். அரசியல் அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதற்காக நாட்டு மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடும் அளவுக்கு மோடியும், அமித் ஷாவும் சென்றனா்.
கேரளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரதமா் மோடி தங்களிடம் சா்வாதிகாரத்தைக் காட்ட முடியாது என்பதை உணா்த்திவிட்டனா். அயோத்தியில் பாஜக தோல்வியடைந்தது. ஆனால், வாரணாசியில் பிரதமா் மோடி தப்பிவிட்டாா். வன்முறையும், மதவெறுப்புணா்வும் தேவையில்லை என்ற பாடத்தை பாஜகவுக்கு அயோத்தி மக்கள் கற்பித்துள்ளனா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளும் பாஜகவுக்கு உரிய பதிலடி கொடுக்கும் என்றாா்.
வயநாடு எம்.பி. பதவி ராஜிநாமா?: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன், வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்வாா் என்பதை சூசகமாக தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘ராகுல் காந்தி நாட்டுக்கு தலைமையேற்கும் சூழல் உருவாகும்போது வயநாடு தொகுதியைக் கைவிட்டால் நாம் வருத்தப்படக் கூடாது. நாம் எப்போதும் ராகுலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவரது சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.