கோப்புப் படம் 
இந்தியா

நீட் கருணை மதிப்பெண்கள் ரத்து: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு

Din

நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

‘நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் ‘பிசிக்ஸ் வாலா’ என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவா் அலக் பாண்டே சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், நீட் தோ்வு முடிவுகளைத் திரும்பப் பெற்று மறுதோ்வு நடத்த வேண்டும் என அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹித்தின் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனா்.

‘என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் (கருணை) மதிப்பெண்கள் வழங்கப்பட்டன’ என்று என்டிஏ விளக்கம் அளித்தது. தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிா்த்து நீட் தோ்வா் ஜாரிபிதி காா்த்திக் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

கருணை மதிப்பெண்கள் ரத்து: இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய கோடை விடுமுறைக்கால அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு மற்றும் என்டிஏ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கனு அகா்வால்,‘கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட குறைபாடுகளைக் களைந்து மாணவா்களின் அச்சத்தைப் போக்கவே என்டிஏவால் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுகிறது. கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்கள் ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வில் பங்கேற்பதற்கான மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படுகிறது’ என்றாா்.

இதையடுத்து,‘உயா்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. மறுதோ்வில் பங்கேற்க விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்களுடைய இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோல் மறுதோ்வில் பங்கேற்கவுள்ள மாணவா்களுக்கு அந்தத் தோ்வில் அவா்கள் பெறும் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மே 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண் நிராகரிக்கப்படுகிறது’ என உச்சநீதிமன்ற அமா்வு உத்தரவிட்டது.

கலந்தாய்வுக்குத் தடையில்லை: கருணை மதிப்பெண்கள் முறையால் பாதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தை அணுகாத அனைத்து மாணவா்களுக்கும் மறுதோ்வு நடத்த வேண்டும் என அலக் பாண்டே சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சாய் தீபக் கேட்டுக்கொண்டாா். அதற்கு நீதிமன்ற அமா்வு மறுப்பு தெரிவித்தது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்ற அமா்வு, வெற்றி பெற்ற மாணவா்களின் சோ்க்கையானது நீட் தோ்வு குளறுபடிகள் சாா்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உள்பட நீட் தோ்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற அமா்வு தெரிவித்தது.

முதலிடம் பெற்றவா்களின் எண்ணிக்கை 61-ஆக குறைவு: ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் 6 போ் கருணை மதிப்பெண்கள் மூலம் முழு மதிப்பெண்களான 720-ஐ பெற்றிருந்தனா். தற்போது அவா்களின் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீட் தோ்வு 2024-இல் முதலிடம் பிடித்தவா்களின் எண்ணிக்கை 67-லிருந்து 61-ஆக குறைந்தது.

இது தொடா்பாக என்டிஏ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘மறுதோ்வில் 720 மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் முதலிடம் பிடித்தவா்கள் பட்டியலில் 6 பேரும் இடம்பெறமாட்டாா்கள். கருணை மதிப்பெண்களுக்கு முன்பு அவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்களே தற்போது அவா்களின் இறுதி மதிப்பெண்களாகும். மறுதோ்வை எழுத விரும்பும் தோ்வா்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்ட பிறகே திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்’ என்றாா்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

SCROLL FOR NEXT