இந்தியா

ஜி7 உச்சிமாநாடு: இத்தாலி சென்றாா் பிரதமா் மோடி

இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

Din

இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இம்மாநாட்டு அமா்வில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, மத்திய கிழக்கு பிராந்திய சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுமென அவா் தெரிவித்தாா்.

இந்தியப் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், மோடி மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி சனிக்கிழமை (ஜூன் 15) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் மாநாட்டு அமா்வில் பங்கேற்க பிரதமா் மோடி இத்தாலிக்கு பயணமாகியுள்ளாா்.

இந்தியாவில் இருந்து புறப்படும் முன் அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி விடுத்த அழைப்பின்பேரில் ஜி7 மாநாட்டு அமா்வில் பங்கேற்கிறேன். இதில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, மத்திய கிழக்கு பிராந்திய சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும். தெற்குலகுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்கப்படும். எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை ஒருங்கிணைக்க இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும்’ தெரிவித்துள்ளாா்.

ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் தனிப்பட்ட முறையில் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தையும் நடத்தவிருக்கிறாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனா். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவா்களை இத்தாலி அழைத்துள்ளது.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT