குஜராத் மாடல் 
இந்தியா

குஜராத் மாடல்: வீட்டு வசதி திட்டத்தில் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு! குடியிருப்போர் எதிர்ப்பு

இதுதான் குஜராத் மாடல் என சமூக வலைத்தளங்களில் பதிவு

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் மாநிலம் வதோராவில், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஊழியரான முஸ்லிம் பெண்ணுக்கு, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு, அங்கு வாழும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஓரிரு நாள்கள் அல்ல சில ஆண்டுகளாகவே அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலேயே, அப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் வாழ விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கான முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்துக்குள் ஹர்ணி என்ற முஸ்லிம் பெண்ணுக்கு 2017ஆம் ஆண்டு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அவரது சொந்த வீடு கனவு நிறைவேறியதாகத்தான் அப்போது நினைத்திருப்பார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, சிறுபான்மையினப் பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, 33 அடுக்குமாடிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 460 குடும்பங்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு ஆட்சேப மனுவை தற்போது அளித்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

தங்களது மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்துக்குள் ஒரு முஸ்லிம் வருவதை ஏற்கமுடியவில்லை, இந்த குடியிருப்புக்குள் அவர் இருப்பது எங்களுக்கு மிரட்டல் மற்றும் தொல்லையாக இருக்கும், இந்த வளாகத்துக்குள் வீடு ஒதுக்கப்பட்ட ஒரே முஸ்லிம் அவர் மட்டுமே என்றும் அவர்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பெண் கூறுகையில், எனக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கு, 2020ஆம் ஆண்டே அங்கு இருப்பவர்கள் முதல்வர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார்கள். எனக்கு வீடு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தினர். பிறகு இது காவல்நிலையம் வரை சென்று இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட காவல்துறை, அனைவரையும் ஒற்றுமையாக இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தது. ஆனால், திடீரென மீண்டும் ஒரு சில நாள்களுக்கு முன்பு, இங்கு இதே பிரச்னை எழுந்துள்ளது.

இப்பகுதிக்கு வந்தது முதலே மற்றவர்களிடமிருந்து ஒதுக்கப்படுவது போல உணர்கிறோம். சிறு வயது முதலே அனைத்து சமுதாய மக்களையும் சேர்ந்த பகுதியில்தான் வளர்ந்தேன். ஆனால், இங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதற்குத் தீர்வும் கிடைக்கவில்லை. எனது மகன் 12ஆம் வகுப்பு வந்துவிட்டான். அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மற்றவர்கள் அவனை ஒதுக்குவதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனவேதனை அடைகிறான் என்கிறார்.

தற்போது பொது நலன் மனு என்று கூறி 33 பேர் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் என பல முக்கிய துறைகளுக்கும் மனு கொடுத்திருக்கிறார்கள். அதில், முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கிய ஆணையை ரத்து செய்து, வேறு குடியிருப்புப் பகுதிக்கு அவரை அனுப்புமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, 461 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், அமைதியை தீயிட்டுக் கொளுத்துவது போல முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இங்கு யாருமே முஸ்லிம்கள் இல்லை. பிறகு அவரை எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி கேட்கிறார்கள். இப்படி பல கேள்விகளை அவர்கள் தொடர்ந்து எழுப்பிவரும் நிலையில், இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பேசுபொருளாகி, இதுதான் குஜராத் மாடலா என்ற அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இங்கு வாழும் பலரும் சைவம் சாப்பிடுபவர்களாக இருப்பதாகவும், இவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒரு சிறுபான்மையினராக இருப்பதை ஏற்கவே முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தற்போது, அப்பெண், வதோதராவில் வேறு ஒரு பகுதியில் தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். தனது சொற்ப வருமானத்தில் சேர்த்து வாங்கிய இந்த வீட்டை விற்க மனம் வரவில்லை என்றும், இதற்கு ஒருநாள் வழி பிறக்கும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.

இந்த குடியிருப்பில் இருக்கும் சிலர் இப்பெண்ணுக்கு ஆதரவாக இருந்தாலும், அவர்களது கை ஓங்காததால், அவர்களது குரல் எங்கும் ஒலிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT