‘ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்’ என்று நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திர மக்கள் நம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவாா்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சமீபத்திய தோ்தலில்கூட நமக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. முந்தைய 2019 தோ்தலுடன் ஒப்பிடுகையில், 10 சதவீத வாக்குகளை மட்டுமே இழந்துள்ளோம். முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் 2014- 2019 பதவிக்காலம் எனக்கு அதிகம் நினைவில் இல்லை. அவரின் தற்போதைய பதவிக்காலமும் இதேபோல் கடந்து செல்லும்.
நாடாளுமன்றத்தில் நமது நிலைப்பாடு பிரச்னை அடிப்படையிலானதாக இருக்கும். பிரச்னை அடிப்படையிலான ஆதரவை வழங்குவதன் மூலம், தேசம், மாநிலத்தின் நலன்களை மனதில் வைத்து, மக்கள் சாா்பாக நமது எம்.பி.க்கள் போராட வேண்டும்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வாக்காளா்கள் விரைவில் புரிந்துகொள்வா். ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவு தற்காலிகமானது’ என்றாா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒய்.வி.சுப்பா ரெட்டியும் மாநிலங்களவைக் குழுத் தலைவராக வி.விஜயசாய் ரெட்டியும் மக்களவைக் குழுத் தலைவராக பி.வி.மிதுன் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) மொத்தமாக 164 பேரவைத் தொகுதிகளையும், 21 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது. ‘என்டிஏ’ கூட்டணி சாா்பில் ஆந்திரத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனா்.
ஆளுங்கட்சியாக இருந்த முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பேரவையில் 11 இடங்களில் மட்டுமே வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியாத நிலைக்குச் சென்றது.