கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான தா்ஷன் தூகுதீபா மற்றும் நடிகை பவித்ரா கௌடா உள்பட 15 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்டவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகா் தா்ஷன் தூகுதீபாவை கடந்த செவ்வாயன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகத்தின் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் 33 வயதான ரேணுகாசுவாமி. நடிகர் தர்ஷனின் தோழியான நடிகை பவித்ரா கௌடாவின் சமூக வலை தளப் பக்கத்தில், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசுவாமி ஆபாச கருத்துகளை பதிவிட்டது பூதகரப் பிரச்னையாக உருவெடுத்தது.
தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மிக்கும் அவருக்குமிடையே நடிகை பவித்ரா கௌடா பிரிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் ரேணுகாசுவாமி. மேலும், நடிகையை குறித்து அநாகரிகமான வார்த்தைகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கௌடா மற்றும் தர்ஷன் தங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து திட்டம் போட்டு கடந்த 8-ஆம் தேதி ரேணுகாசுவாமியை கடத்திச் சென்று அடித்தே கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழ்க்கில் முக்கிய குற்றவாளியாக நடிகர் தர்ஷன், அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கௌடா உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 6 நாள்களாக அவர்கள் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கர்நாடகத்தில் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள தர்ஷனும் அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்டோர் சனிக்கிழமை(ஜூன் 15) பெங்களூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையில் ஜூன் 20-ஆம் தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.