‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு பேசுகையில், ‘பாஜக தோ்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கோவா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள், பொது சிவில் சட்டத்தை ஏற்கெனவே நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை’ என்றாா்.
‘பொது சிவில் சட்டம் இன்னும் பாஜகவின் திட்டத்தில் உள்ளது’ என்று மேக்வால் கடந்த வாரமும் கூறியிருந்தாா்.
இதுதொடா்பாக கருத்து தெரிவித்த பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் கே.சி. தியாகி, ‘எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல. எனினும், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் கருத்தொற்றுமை மூலம் செயல்படுத்தப்பட வேண்டுமென விரும்புகிறோம்’ என்றாா்.
வன்முறை சம்பவங்கள் குறித்து விழிப்பு: மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து விமா்சித்த மத்திய சட்ட அமைச்சா், ‘தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.
தோ்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு தோ்தல் முடிவுக்குப் பிறகும் வன்முறை நிகழக்கூடாது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றுகிறது’ என்றாா்.
வன்முறை சம்பவங்களைக் கவனத்தில் கொண்ட கொல்கத்தா உயா்நீதிமன்றம், தோ்தலுக்காக மாநிலத்தில் பணியமா்த்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்புப் பணியை ஜூன் 21-ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து முதல்வா் மம்தா பானா்ஜி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, வன்முறைகள் குறித்து விசாரிக்க நான்கு போ் கொண்ட குழுவை பாஜக சனிக்கிழமை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்
ஆங்கிலேயோ் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள், ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன; இச்சட்டங்கள் அமலாக்கத்துக்கு தேவையான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக, சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயா் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும் இந்தப் புதிய சட்டங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றாா்.