முகப்பு
இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை தேடும் ராஜஸ்தான் காவல்துறை!

புனிதப்பயணம் மேற்கொள்ளும் சிறுமியை, ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர் தேடப்பட்டு வருகிறார்

Updated On : 18 ஜூன், 2024 at 12:59 PM
கோப்புப் படம்
பகிர்:

ராஜஸ்தானில் 11 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை ராஜஸ்தான் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வசிக்கும் 11 வயது சிறுமி ஒருவர், கடந்த 15 நாட்களாக தனது குடும்பத்தினருடன் மதவாலயங்களுக்கு புனிதப்பயணம் சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று ஜூன் 17ஆம் தேதியில், சிறுமியும் குடும்பத்தினரும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்குச் சென்று, பின்னர் இரவு 9 மணியளவில் அஜ்மீர் ரயில்நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென அதிகாலை 1:30 மணியளவில் குடும்பத்தினர் எழுந்தபோது, சிறுமியும், அவர்களது பைகளும் காணாமல் போனதைக் கண்டுள்ளனர். சிறிது நேரம் அருகில் தேடியும், கிடைக்காததால், உடனடியாக அரசு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், ஒருவர் சிறுமியை கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியைத் தேடத் தொடங்கியுள்ளனர். சுமார் 3 மணிநேரம் கழித்து, அதாவது அதிகாலை 4.30 மணியளவில், நிறுத்தப்பட்ட ரயிலின் வெற்று பெட்டிக்குள் சிறுமி இருப்பதை அறிந்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாவது, ”மருத்துவர்கள் குழு சிறுமியை சிகிச்சையளித்து வருகின்றனர். சிறுமியின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன; சிறுமியின் தாடை வீங்கியுள்ளது; மேலும், அவரது மேல்பற்கள் காயமடைந்துள்ளன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரும் மருத்துவர்களும் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், மருத்துவர்களின் விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே இந்த சம்பவத்தின் உறுதித்தன்மை தெரியவரும்” என்று கூறுகின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →