முகப்பு
இந்தியா

நீட் கருணை மதிப்பெண் ரத்தால் முதலிடம் பிடித்த 6 பேருக்கு இழப்பு: தகவல்கள்

நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் முதலிடம் பிடித்த 6 பேர் முழு மதிப்பெண்ணை இழக்கிறார்கள் என்று தகவல்

Updated On : 19 ஜூன், 2024 at 12:05 PM
நீட் தேர்வு
பகிர்:

கருணை மதிப்பெண் ரத்தால், முழு மதிப்பெண் எடுத்த 67 பேரில், 6 மாணவர்களின் மதிப்பெண் கிட்டத்தட்ட 60 - 70 புள்ளிகள் குறையக்கூடும் என்று தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில், கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, மாணவர்களுக்கான மறு மதிப்பெண் வழங்கும் பணியை தொடங்கியிருக்கிறது.

இதில், 720க்கு 720 மதிப்பெண் பெற்ற 67 மாணவர்களில் 6 பேர் 60 - 70 புள்ளிகளை இழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்தவாரம் தெரிவித்திருந்தது.

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

‘நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் ‘பிசிக்ஸ் வாலா’ என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவா் அலக் பாண்டே சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், நீட் தோ்வு முடிவுகளைத் திரும்பப் பெற்று மறுதோ்வு நடத்த வேண்டும் என அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹித்தின் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனா்.

‘என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் (கருணை) மதிப்பெண்கள் வழங்கப்பட்டன’ என்று என்டிஏ விளக்கம் அளித்தது. தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிா்த்து நீட் தோ்வா் ஜாரிபிதி காா்த்திக் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, உயா்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. மறுதோ்வில் பங்கேற்க விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்களுடைய இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோல் மறுதோ்வில் பங்கேற்கவுள்ள மாணவா்களுக்கு அந்தத் தோ்வில் அவா்கள் பெறும் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மே 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண் நிராகரிக்கப்படுகிறது’ என உச்சநீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்த நிலையில், 720 க்கு 720 மதிப்பெண் எடுத்த 6 மாணவர்களுக்கு மதிப்பெண் குறையக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி 720க்கு 650 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சேர்க்கை பெற முடியும். குறிப்பாக 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால்தான் மிகப்பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

‘இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) 0.001 சதவீதம் அளவு அலட்சியம் நடைபெற்றிருந்தாலும், அதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது. தோ்வுக்குத் தயாராகும்போது மாணவா்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், ‘இந்த வழக்கை விரோதமாகக் கருதக் கூடாது’ என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →