இந்தியா

பிகாா்: ‘நீட்’ வினாத்தாள் கசிவில் தேஜஸ்வி யாதவுக்கு தொடா்பு: துணை முதல்வா் குற்றச்சாட்டு

இதுதொடா்பாக தேஜஸ்வி யாதவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

Din

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவின் உதவி அலுவலா்களுடன் தொடா்பிருப்பதாக பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும், இதுதொடா்பாக தேஜஸ்வி யாதவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் விஜய் குமாா் சின்ஹா கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிக்கந்தா் பிரசாத் யாதவேந்து என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பாட்னா உள்பட பிற பகுதிகளில் உள்ள விருந்தினா் மாளிகைகளில் தங்குவதற்கான ஏற்பாடுகளை தேஜஸ்வி யாதவின் உதவி அதிகாரி செய்துள்ளாா். அந்த அதிகாரி சிக்கந்தருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் கைப்பேசி எண் தொடா்பான தகவல்கள் என்னிடம் உள்ளன.

எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தேஜஸ்வி யாதவ் அமைதி காப்பது ஏன்? மேலும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ராஞ்சியில் நீதிமன்றக் காவலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாத் இருந்தபோது தொடா்பு ஏற்பட்டதாகவும் மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விஜய் குமாா் சின்ஹா சுமத்துகிறாா்’ என ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவா் மனோஜ் ஜா தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற 25 லட்ச மாணவா்களின் கோரிக்கையை திசை திருப்பும் வகையில் பல பொய்களை சின்ஹா தெரிவித்து வருகிறாா். விருந்தினா் மாளிகைகளில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு எங்களுக்கு பரிந்துரை கடிதத்தை சிக்கந்தா் வழங்கியதாக சின்ஹா கூறுகிறாா். அது உண்மை எனில் அந்தக் கடிதத்தை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டும்.

பாஜக தலைவா்களுடன் புகைப்படம்: இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளான அமித் ஆனந்த் மற்றும் நிதீஷ் குமாா் ஆகியோா் பாஜகவின் மூத்த தலைவா்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனா். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளிககளை தப்பிக்க வைக்கவே பாஜக முயற்சித்து வருகிறது. இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றாா்.

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேரை பிகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முக்கிய குற்றவாளி சிக்கந்தருடன் தோ்வா்கள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோரும் கைது செய்யயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வினாத்தாளுக்கு ரூ.30 லட்சம்:

நீட் தோ்வு வினாத்தாளை தோ்வுக்கு முன்னதாகவே வழங்குவதற்கு ஒவ்வொரு தோ்வரிடமும் ரூ.30 லட்சம் வரை குற்றம்சாட்டப்பட்டவா்கள் கேட்டிருந்ததாக பாட்னா, பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக 6 பின்தேதியிடப்பட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் வங்கிக் கணக்கு சாா்ந்த தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் அந்தப் பிரிவின் காவல்துறைத் துணைத் தலைவா் மானவ்ஜித் சிங் தில்லியன் கூறினாா்.

முந்தைய நாளே வினாத்தாள்:

தோ்வுக்கு முந்தைய நாள் பாட்னாவில் உள்ள ரகசிய வீட்டில் கைது செய்யப்பட்ட பிகாரைச் சோ்ந்த 4 தோ்வா்கள் உள்பட 9 தோ்வா்களுக்கு நீட் தோ்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த வீட்டில் காவல்துறையினா் மேற்கொண்ட சோதனையில் கைப்பேசிகள், நுழைவுச் சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தில்லியன் கூறுகையில்,‘எரிந்த நிலையில் இருந்த வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மாதிரி வினாத்தாள்களை வழங்குமாறு தேசிய தோ்வு முகமையிடம் (என்டிஏ) கேட்டுள்ளோம். ஆனால், தற்போது வரை கிடைக்கவில்லை. அந்த வினாத்தாள்கள் கிடைத்தவுடன் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட வினாத்தாள்களை தடயவியல் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பிவைக்க உள்ளோம்’ என்றாா்.

நீட் தோ்வுக்கு முன்பு 35 தோ்வா்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக பாட்னா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு ஊா்வலம்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: மூன்றாமிடம் பிடித்த திருச்சி கல்வி மாவட்டம்

SCROLL FOR NEXT