நீட் தேர்வின் போது முன்கூட்டியே விடையுடன் வினாத்தாள் கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படும் பாட்னா நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மூன்று மாணவர்களும், அந்த தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறும் அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னா நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 12 மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கிடைத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ஒரு மாணவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறு வினாத்தாள் கிடைக்கப்பெற்ற மாணவர்களில் ஒருவர்தான் 720க்கு 609 மதிப்பெண் பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியலில் 71000 ரேங்க் எடுத்துள்ளார். மற்றவர்கள் 500, 400, 300, 200, 185 என மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அதாவது, நீட் வினாத்தாளை முன்கூட்டியே பெற்று, அதற்கான விடைகளையும் பெற பெரிய தொகையை பெற்றோர் மோசடிக்காரர்களுக்குக் கொடுத்து வினாத்தாளை வாங்கி தங்களது பிள்ளைகளுக்குக் கொடுத்து நீட் தேர்வெழுதிய நிலையில், இதுதான் அவர்களது மதிப்பெண்.
இந்த பாட்னா நீட் தேர்வு மையத்தில் அதிக மதிப்பெண் எடுத்தவர் 609 மதிப்பெண்களுடன் 71 ஆயிரமாவது ரேங்கில் உள்ளார். மொத்தமுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 56 ஆயிரம்தான். எனவே, இவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல தெரிய வந்திருக்கும் மோசடிகள் ஒருசிலதான். இன்றும் தெரியாத மோசடிகள் எத்தனையோ என்று நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாட்னாவில் நடந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக, பிகார் காவல்துறை, பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கொடுத்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணைக்கு உள்படுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆயுஷ் ராஜ் என்ற மாணவர், தேர்வுக்கு முன்பு தங்களுக்குக் கிடைத்த வினாத்தாளும், நீட் வினாத்தாளும் ஒன்றுதான் என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பான விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு முன்பே தனக்கு விடையுடன் கூடிய வினாத்தாள் கிடைத்ததாக பாட்னா மாணவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.