ஜனசேனைத் தலைவர் பவன் கல்யாண் வெற்றிபெற்றதால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக 'பத்மநாப ரெட்டி' என மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆந்திரத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜனசேனை தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் அபார வெற்றிபெற்றார். இதனால், பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை அதிகாரபூர்வமாக 'பத்மநாப ரெட்டி' என மாற்றிக் கொண்டுள்ளார்.
ஜனசேனா தலைவரும், பிதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பவன் கல்யாணுக்கு, காபு சமுதாயத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான முத்ரகடா பத்மநாபம் சவால் விடுத்திருந்தார். எனது பெயரை பத்மநாபம் என்பதற்கு பதிலாக முத்ரகடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
பவன் கல்யாண், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்பியுமான வங்கா கீதாவை 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதுகுறித்து பத்மநாப ரெட்டி கூறுகையில், “ எனது பெயரை மாற்றும்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் அதை மாற்றினேன். இருப்பினும், ஜனசேனை தலைவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பினர்” எனக் கூறியுள்ளார்.
காபு சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான பத்மநாப ரெட்டி, காபு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி பிரசாரம் செய்தார். இவர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.