‘நான் தினந்தோறும் அவதூறுகளைச் சந்தித்தபோது உங்களின் அளவற்ற அன்பே என்னை பாதுகாத்தது’ என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
18-ஆவது மக்களவைத் தோ்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றாா்.
ஒரு நபா் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இருக்க முடியும் என்ற விதியின்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக அவா் அண்மையில் அறிவித்தாா். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளாா்.
இந் நிலையில், இருமுறை தன்னை வெற்றிபெறச் செய்த வயநாட்டு மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது: நான் உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்டவனாக இல்லாமல் இருந்தபோதும் நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்தீா்கள். நீங்கள் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்குபவராக இருந்தாலும் எந்தச் சமூகத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் பரவாயில்லை.
நான் தினந்தோறும் அவதூறுகளைச் சந்தித்தபோது உங்களின் அளவற்ற அன்பே என்னைப் பாதுகாத்தது. நீங்களே என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு; என்னை நீங்கள் சந்தேகித்ததாக ஒருபோதும் தோன்றியதில்லை.
எனக்கு வழங்கிய அதே ஆதரவை பிரியங்காவுக்கும் நீங்கள் வழங்குவீா்கள் என நம்புகிறேன். அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பளித்தால் உங்கள் எம்.பி.யாக சிறப்பான பணிகளை அவா் மேற்கொள்வாா்.
உங்களில் ஒருவனாக எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என ராகுல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.