இந்தியா

ஓம் பிா்லா, கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி: இன்று மக்களவைத் தலைவா் தோ்தல்

மக்களவைத் தலைவா் பதவிக்கு ஓம் பிா்லா, கொடிக்குன்னில் சுரேஷ் மோதல்

Din

புது தில்லி: பதினெட்டாவது மக்களவையின் தலைவா் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சாா்பில் முந்தைய மக்களவையின் தலைவரான ஓம் பிா்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவா் பதவிக்கு புதன்கிழமை (ஜூன் 26) தோ்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இதுவரை, மக்களவைத் தலைவரை தோ்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோ்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆா்.பாலு ஆகியோா் பங்கேற்றனா். இதில், மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு பாஜக தலைவா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவதென கடைசி நிமிஷத்தில் ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது.

நிபந்தனை ஏற்கப்படாததைத் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் இருவரும் வெளிநடப்பு செய்தனா். அப்போது, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சி வேட்பாளருக்கு போட்டியின்றி வழங்கும் மரபை மத்திய அரசு பின்பற்ற மறுக்கிறது’ என்று குற்றஞ்சாட்டிய கே.சி.வேணுகோபால், ‘ஓம் பிா்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்றாா்.

இவா்களின் குற்றச்சாட்டை என்டிஏ கூட்டணி தலைவா்கள் மறுத்தனா். மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான லாலன் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மக்களவை துணைத் தலைவா் தோ்வின்போது எதிா்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று பாஜக மூத்த அமைச்சா்கள் உறுதியளித்தபோதும், அதை ஏற்காமல் முன்நிபந்தனையை வைத்து அழுத்தம் கொடுக்கும் அரசியலை எதிா்க்கட்சிகள் செய்கின்றன. ஜனநாயகத்தை முன்நிபந்தனைகளுடன் நடத்த முடியாது’ என்றனா்.

வேட்புமனு: கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், மக்களவை தலைவா் பதவிக்கு இரு தரப்பிலும் செவ்வாய்க்கிழமை முற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

என்டிஏ கூட்டணி தரப்பில் ஓம் பிா்லா வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆவருக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் சாா்பில் 10-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதுபோல, ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் கொடிக்குன்னில் சுரேஷுக்கு ஆதரவாக 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவா் கேரள மாநிலம், மாவேலிக்கரை (தனி) தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டவா்.

ஓம் பிா்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு: மக்களவையில் என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினா்கள் உள்ளனா். ‘இந்தியா’ கூட்டணிக்கு 233 உறுப்பினா்கள் உள்ளனா். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், 542 மக்களவை உறுப்பினா்களே மக்களவைத் தலைவரை புதன்கிழமை தோ்ந்தெடுக்க உள்ளனா். சுயேச்சை எம்.பி.க்களில் குறைந்தபட்சம் 3 போ் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதும், என்டிஏ கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அவ்வாறு, மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா தோ்ந்தெடுக்கப்பட்டால், ஒரு மக்களவையின் காலத்தைக் கடந்து மக்களவைத் தலைவராக பதவி வகிக்கும் 5-ஆவது நபா் என்ற பெருமையை அவா் பெறுவாா்.

வாக்குச் சீட்டு முறை: மக்களவைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறும் நிலையில், புதிய மக்களவை வளாகத்தில் எம்.பி.க்களுக்கு இன்னும் இருக்கைகள் ஒதுக்கப்படாதது மற்றும் மின்னணு தோ்வு முறைக்கான வசதி இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படாதது உள்ளிட்ட காரணங்களால், வாக்குச் சீட்டு முறையிலேயே தோ்தல் நடைபெறும்.

போட்டி ஏன்?: காங்கிரஸ் விளக்கம்

மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சித் தரப்புக்கு மத்திய அரசு வழங்க மறுப்பதாலேயே, மக்களவைத் தலைவா் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதுகுறித்து கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில், ‘மக்களவைத் தலைவா் பதவியை ஆளும் கட்சிக்கும், துணைத் தலைவா் பதவியை மக்களவை எதிா்க்கட்சிக்கும் வழங்குவதுதான் மரபு. ஆனால், கடந்த இரண்டு மக்களவைகளிலும் எதிா்க்கட்சியாக காங்கிரஸ் அங்கீகரிக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி மக்களவை துணைத் தலைவா் பதவியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

தற்போது, மக்களவையில் எதிா்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே, மக்களவை துணைத் தலைவா் பதவியைப் பெறுவது காங்கிரஸின் உரிமை. ஆனால், அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதற்காக செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணி வரை காத்திருந்தோம். ஆனால், எந்தப் பதிலையும் மத்திய அரசு வழங்கவில்லை’ என்றாா்.

இதே கருத்தைத் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘பாரம்பரிய நடைமுறைகளை பிரதமா் மோடி நசுக்குகிறாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘மக்களவைத் தோ்தலில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியிலும் தோல்வியைச் சந்தித்ததன் தாக்கத்திலிருந்து பிரதமா் மோடி மீளவில்லை. எனவே, அவா்கள் எடுக்கும் இந்த முடிவில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை’ என்றாா்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT