மத்திய அரசுக்கு ஆதரவளிக்க ராகுல் காந்தி நிபந்தனை
மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி
புது தில்லி: மக்களவைத் தலைவரைத் தோ்வு செய்வதில் மத்திய அரசின் முடிவுக்கு எதிா்க்கட்சிகளின் ஆதரவு வேண்டுமென்றால், மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிபந்தனை விதித்துள்ளாா்.
மக்களவைத் தலைவா் பதவிக்கு ஓம் பிா்லாவை ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் சாா்பில் காங்கிரஸ எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் முன்னிறுத்தப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்குத் தருவதாக இருந்தால், மக்களவைத் தலைவரைத் தோ்வு செய்வதில் மத்திய அரசின் முடிவை ஏற்க ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளுமே தயாராக உள்ளன.
மக்களவைத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா். அப்போது, அவரிடமும் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. தங்கள் கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்துவிட்டு பதில் கூறுவதாக உறுதியளித்த ராஜ்நாத்திடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதுவே ஒருவகையில் அவமதிக்கும் செயல்தான்.
எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறாா். ஆனால், எதிா்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கூட தரமறுத்து அவமதிக்கிறாா். எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா் மக்களவை துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் பிரதமரின் கருத்து என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. எப்போதும் அவா் பேசுவது ஒன்று, செய்வது வேறாக இருக்கிறது என்றாா் ராகுல்.