மக்களவை, தலைவரின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும்..மற்றவர் வழிகாட்டுதலில் அல்ல! -அகிலேஷ்
மக்களவை, தலைவரின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை ஜனநாயக நீதியின் தலைமை நீதிபதி என்றும், மக்களவை அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும், மற்றவர்களில் வழிகாட்டுதலில் அல்ல என்றும் புதன்கிழமை கூறியுள்ளார்.
மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசிய அகிலேஷ் யாதவ், “தலைமை அதிகாரியாக, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளையும் மரியாதையையும் அளிப்பார் என அனைத்து உறுப்பினர்களும் நம்புகின்றனர். பாரபட்சமற்ற தன்மையே உயர் பதவியின் பெரும் பொறுப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மக்களவையில் கண்ணியத்தை புண்படுத்தும். உங்களின் அனைத்து நியாயமான முடிவுகளுக்கும் நாங்கள் துணை நிற்போம். அது எதிர்க்கட்சிக்காக மட்டும் இருக்கக்கூடாது என்று எதிர்பார்ப்போம். முதன்முறையாக மக்களவைக்கு வந்துள்ளேன். மக்களவைத் தலைவர் நாற்காலி மிகவும் உயரமானது என நினைக்கிறேன். மக்களவைத் தலைவர் நாற்காலிக்கு பின்னால் உள்ள கல் நன்கு அமைக்கப்பட்டிருந்தாலும், சிமென்ட் நிரப்பப்பட்ட இடத்தில் சில இடைவெளிகள் இன்னும் காணப்படுகின்றன” எனக் கூறினார்.
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, புதிய மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாகவும் உள்ளது.