பிகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்தது- ஒரே வாரத்தில் 4-ஆவது சம்பவம்
பிகாரில் பாலங்கள் இடிந்து விழும் தொடர்ச்சி: பொதுமக்கள் அதிர்ச்சி
பிகாரின் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாலம் ஒன்று இடிந்தது. பிகாரில் கடந்த ஒரு வாரத்தில் இடிந்த நான்காவது பாலம் இதுவாகும்.
பாலம் இடிந்தது தொடா்பாக கிஷண்கஞ்ச் மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘பகதூா்கஞ்ச் வட்டத்தில் சிறிய துணை ஆறு ஒன்றின் குறுக்கே 70 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் இந்தப் பாலம் கடந்த 2011-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நேபாளத்தில் ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்ததால் பாலத்தின் கீழே அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரின் அளவு திடீரென வேகமாக அதிகரித்ததால் பாலத்தின் சில தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக பாலத்தில் கடந்து செல்ல முயற்சித்துவிடக் கூடாது என்பதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாலத்தை பழுதுபாா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
முன்னதாக, கடந்த வாரம் பிகாரின் அராரியா மாவட்டத்தில் இரு பாலமும், ஸ்வான் மாவட்டத்தில் ஒரு பாலமும் இடிந்து விழுந்தன. இவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த புதிய பாலங்கள் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக பிகாரில் இதுபோல பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகி வருகிறது. தரமற்ற கட்டுமானம் காரணமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.