பிகாரின் மதுபானி மாவட்டத்தில் கட்டமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் கடந்த 11 நாள்களில் மட்டும் இதுபோல் பாலம் இடிந்து விழுவது 5 ஆவது நிகழ்வாகும்.
பிகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பூதாஹி ஆற்றின் நடுவே இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதேபோன்று கிருஷ்ணகஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
2011-ம் ஆண்டு கங்கை நதியை மகாநந்தாவுடன் இணைக்கும் சிறிய துணை நதியான மடியா மீது பாலம் கட்டப்பட்டது. நேபாளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால் தூண்கள் வழுவிழந்து பாலம் இடிந்து விழுந்தது.
பிகாரின் அராரியா, சிவான் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வாரம் இதேபோன்ற மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன. சமீப ஆண்டுகளில், மாநிலத்தில் ஏராளமான பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள், பொதுப்பணித்துறையின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தச் சம்பவங்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ வாழ்த்துகள்..! பிகாரில் இரட்டை என்ஜின் அரசின் இரட்டை அதிகாரத்தில், 9 நாள்களில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய ஜனநாயக கட்சிகளுடன் இணைந்துள்ள முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பாலங்கள் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதை "ஊழல்" என்று சொல்லாமல் "மரியாதை" என்று சொல்லிக்கொள்கிறார்கள் சில நேர்மையானவர்கள். இந்தச் சுரண்டல்களுக்கு எதிராக மீடியாக்கள் வாய் திறக்காதது ஏன்?. இந்தப் பாலங்கள் இடிந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.