பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில், மக்கள் கேட்க விரும்பும் பிரச்னைகள் குறித்துப் பேசுவதில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவர் பவன் கேரா கூறியதாவது:
பிரதமர் தனது வானொலி நிகழ்ச்சியில் நீட் வினாத்தாள் கசிவு, ரயில் விபத்து அல்லது விமான நிலையங்களின் மேற்கூரை சரிந்த சம்பவங்கள் ஆகியவை குறித்துப் பேசாதது ஏன்?.
மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலமாக இது இருந்தபோதிலும் அவரது சொந்த பலத்தில் இந்த அரசு அமையவில்லை. அரசு ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறது.
இந்தச் சூழலில் அறிவுபூர்வமான விஷயங்களை இம்முறை பிரதமர் தனது வானொலி நிகழ்ச்சியில் பேசுவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் அப்படிப் பேசவில்லை.
தில்லி விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழக்கக் காரணமான மேற்கூரை சரிவு குறித்து அவர் பேசவில்லை. மக்கள் கேட்க விரும்பும் பிரச்னைகள் குறித்து அவர் தனது நிகழ்ச்சியில் குறிப்பிடவில்லை.
நீட் தேர்வு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அவற்றில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் கேரளத்தைச் சேர்ந்த குடைகள் குறித்து பிரதமர் பேசுகிறார்.
மக்களவைத் தேர்தலின்போது நாட்டின் வடக்குப் பகுதியும் தெற்குப் பகுதியும் மோதிக் கொள்ளும் வகையில் அவர் பேசினார்.
இதை மக்கள் மறப்பார்களா? தற்போது பிரதமர் விளம்பரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தனது "மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில் "நாட்டு மக்கள் அரசியல் சாசனத்தின் மீதும், 65 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையின் மீதும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.