பிப்ரவரியில் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
கடந்த பிப்ரவரியில் நாட்டில் ரூ.1.68 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நாட்டில் ரூ.1.68 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,68,337 கோடியாகும். இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ஜிஎஸ்டி வருவாயுடன் ஒப்பிடுகையில் 12.5 சதவீதம் அதிகம். கடந்த பிப்ரவரியில் மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.31,785 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.39,615 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.84,098 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.38,593 கோடியும் அடங்கும்). செஸ் வரி வசூல் ரூ.12,839 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.984 கோடியும் அடங்கும்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,713 கோடி. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூ.8,774 கோடியுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம். இதேபோல பிப்ரவரியில் புதுச்சேரியின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.231 கோடி. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூ.188 கோடியுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.