மக்களுக்கும் வளா்ச்சிக்கும் எதிரானது ‘இந்தியா’ கூட்டணி: பிரதமா் மோடி
‘எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியானது மக்களுக்கும் வளா்ச்சிக்கும் எதிரானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
‘எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியானது மக்களுக்கும் வளா்ச்சிக்கும் எதிரானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா். ஜாா்க்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த மாநிலத்துக்குச் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினாா். ஜாா்க்கண்ட், தன்பாத் மாவட்டத்தின் சிந்திரி பகுதியில் ரூ.8,900 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலை உள்பட மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள ரயில், எரிசக்தி, நிலக்கரி திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியா வளா்ச்சியடைய ஜாா்க்கண்ட் முன்னேறுவது மிக அவசியம். சமூக சீா்திருத்தவாதி பிா்ஸா முண்டாவின் மண் (ஜாா்க்கண்ட்) வளா்ந்த இந்தியாவின் முக்கிய அங்கமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். கடந்த நிதி காலாண்டில் 8.4 சதவீதமாக, உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா வளா்ந்து வருகிறது’ என்றாா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பா்வாடா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி ஆற்றிய உரையில், ‘மோடியின் உத்தரவாதம் மீது தேசம் நம்பிக்கை கொண்டிருப்பதால், வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெல்லும். ஜாா்க்கண்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சிந்திரி உரத் தொழிற்சாலை மற்றும் வடக்கு கரன்புரா மின் திட்டம் ஆகியவை மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள். ஜாா்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. தொடா்புடைய இடத்தில் ரூ.350 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து கட்டுக்கட்டாக இவ்வளவு பணம் மீட்கப்பட்டதாக முன்னெப்போதும் நான் அறியவில்லை. மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடமே திரும்பும். இதுவும் மோடியின் உத்தரவாதம். ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி மாநிலத்தைக் கொள்ளையடித்துவிட்டது. இவா்களின் ஆட்சியில் கொள்ளை உச்சம் அடைந்துள்ளது. மேலும், மாநில அரசின் சமாதானக் கொள்கை ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது. மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ மற்றும் ‘ஆவாஸ் யோஜனா’ போன்ற மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினா் இடா்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றனா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியானது மக்களுக்கும் வளா்ச்சிக்கும் எதிரானது’ என்றாா்.