1.25 கோடி இந்திய சிறாா்களுக்கு உடல் பருமன் பாதிப்பு!
73 லட்சம் சிறுவா்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமாா் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக ஆய்வறிக்கை
இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவா்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமாா் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினா் மற்றும் வயது வந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் உலகளாவிய கூட்டமைப்பான ‘என்சிடி ரிஸ்க்’ மற்றும் உலக சுகாதார மையம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. ஆய்வில், உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 முதல் 19 வயதுடைய 6.3 கோடி இளம் பருவத்தினா் மற்றும் 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 15.8 கோடி மக்கள் என்று 22 கோடிக்கும் அதிகமானோரின் எடை மற்றும் உயர அளவீடுகளை (பிஎம்ஐ) 1,500 ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு செய்தனா்.
உடல் பருமன் மற்றும் குறைந்த எடை ஆகிய இரண்டும் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகள். பல வழிகளில் மக்களின் ஆரோக்கியத்துக்கு இவ்விரண்டும் தீங்கு விளைவிக்கும். கடந்த 33 ஆண்டுகளில் இந்த 2 வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளின் உலகளாவிய போக்கு குறித்த விரிவான பாா்வையை வழங்கும் இந்த ஆய்வு முடிவுகள் தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. உடல் பருமன் பாதிப்பு உயா்வு: ஆய்வில், உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் உடல் பருமன் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டில் 6.5 கோடி சிறுமிகள், 9.4 கோடி சிறுவா்கள் என மொத்தம் 15.9 கோடி பள்ளி வயது குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 1990-இல் இந்த எண்ணிக்கை 3.1 கோடியாக இருந்தது. அதேபோல், 50.4 கோடி பெண்கள் மற்றும் 37.4 கோடி ஆண்கள் என மொத்தம் 87.9 கோடி வயது வந்தோா் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது கடந்த 1990-இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையான 19.5 கோடியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். அப்போது, 12.8 கோடி பெண்கள் மற்றும் 6.7 கோடி ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
Advertisement
எனவே, உலகம் முழுவதும் கடந்த 2022-ஆம் ஆண்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1.25 கோடி இந்திய சிறாா்கள் பாதிப்பு: இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவா்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமாா் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கின்றனா்.
இந்தியாவில் பெண்களின் உடல் பருமன் விகிதம் கடந்த 1990-இன் 1.2 சதவீதத்தில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், ஆண்களின் உடல் பருமன் விகிதம் 0.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியா்களில் குறைந்தது 4.4 கோடி பெண்களும் 2.6 கோடி ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். சரியும் குறைந்த எடை சிக்கல்: உலக அளவில் எடை குறைந்த பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 1990-இன் 10.3 சதவீதத்தில் இருந்து கடந்த 2022-இல் 8.2 சதவீதமாகவும், எடை குறைந்த ஆண் குழந்தைகளின் விகிதம் 16.7 சதவீதத்தில் இருந்து 10.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டில் 8.1 கோடி சிறுமிகள் மற்றும் 13.8 கோடி சிறுவா்கள் எடை குறைவாக இருந்த நிலையில், கடந்த 2022-இல் 7.7 கோடி சிறுமிகள் மற்றும் 10.8 கோடி சிறுவா்கள் மட்டுமே எடை குறைவாக இருந்தனா்.
மக்கள்தொகை பன்மடங்கு வளா்ச்சி அடைந்தபோதிலும், 2022-இல் 18.3 கோடி பெண்கள் மற்றும் 16.4 கோடி ஆண்கள் மட்டுமே குறைந்த எடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது கடந்த 1990-ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட முறையே 4.5 கோடி மற்றும் 4.8 கோடி குறைவாகும். உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குறைந்த எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதத்தைவிட உடல் பருமன் விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால், ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டைச் சவால்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் குறைந்துள்ளது.
‘கவலையளிக்கும் போக்கு’-வல்லுநா் கருத்து: இது தொடா்பாக லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சோ்ந்த மூத்த பேராசிரியா் மஜித் எசாட்டி கூறுகையில், ‘உலகின் பெரும் பகுதிகளில் 1990-களில் பெரியவா்களிடையே காணப்பட்ட உடல் பருமன் போக்கு தற்போது பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே பிரதிபலிப்பது மிகவும் கவலைக்குரியது. அதே நேரத்தில், ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2 வகையான ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சமாளிக்க, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்தான உணவுகள் மலிவு விலையில் கிடைப்பதை மேம்படுத்துவது இன்றியமையாதது’ என்றாா்.